பனிப்போரின் யுத்த களமாக உக்ரைன்! (பகுதி -2)

உக்ரைன் மறுபங்கீட்டிற்கான ஏகாதிபத்திய நாடுகளின் பனிப்போரை உள்நாட்டு போராக மாற்றி சோசலிசப் புரட்சியை முன்னெடுப்பதே உக்ரைன் விடுதலைக்கான ஒரே வழி!

பனிப்போரின் யுத்த களமாக உக்ரைன்! (பகுதி -2)

(பகுதி -1 ன் தொடர்ச்சி)

 

நேட்டோ விரிவாக்கத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்

முதல் கட்ட நேட்டோ விரிவாக்கம்

கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவாவில் (Moldovo) ரொமானிய - ரசிய தேசிய இனப் பகைமைகள் நீடித்து வந்த நிலையில் ரசியா ராணுவ ரீதியாக அங்கு நேரடியாக 1992ல் தலையிட்டது. இந்த முரண்பாட்டைப் பயன்படுத்தி அந்த நாட்டிலுள்ள டிரான்ஸ்னிஸ்ட்ரியா (Transnistria - பெரும்பான்மையாக ரசியர்கள் வாழும் பகுதி) எனும் பிராந்தியத்தில் ரசியா தனது 14 வது இராணுவ படைப் பிரிவை அங்கு நிறுத்தியது. டிரான்ஸ்னிஸ்ட்ரியாவின் இராணுவம் மற்றும் ரசிய இராணுவம் இணைந்து மால்டோவா இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டன. இதில் டிரான்ஸ்னிஸ்ட்ரியா வெற்றி பெற்று சுதந்திர குடியரசாக தன்னை அறிவித்து கொண்டது. ரசியா அதை அங்கீகரித்தது. ஆனால் நேட்டோ அங்கீகரிக்கவில்லை. ரசியாவின் தலையீட்டிற்குப் பிறகு 1992ல் நேட்டோவின் வட அட்லாண்டிக் ஒத்துழைப்பு கவுன்சிலிலும், 1994ல் நேட்டோவின் அமைதிக்கான ஒத்துழைப்பு திட்டத்திலும் மால்டோவா இணைந்தது. ஆனால் இன்னும் நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் இணையவில்லை.

1994 -1995 ஆண்டுகளில் யூகோஸ்லோவேக்கியாவில் தன்னாட்சி குடியரசாக இருந்த போஸ்னியாவில், போஸ்னியா முஸ்லீம்கள் - குரோசியர்களுக்கும், செர்பிய இன மக்களுக்கும் இடையில் வெடித்த தேசிய இனமோதல்களின் போது, நேட்டோ அணி போஸ்னியா - குரோசியா பக்கமும், ரசியா செர்பிய கிளர்ச்சியாளர்கள் பக்கமும் நின்றன. இரண்டும் தேசிய இன மோதல்களைத் தூண்டிவிட்டன. செர்பிய பிரிவினைவாத குழுக்களுக்கு ரசியாவும் செர்பியாவும் ஆயுத உதவி செய்ததுடன் அதன் பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஆதரித்தன.

1998-ல் யூகோஸ்லோவேக்கிய குடியரசு கொசோவா (Kosova) வின் அல்பேனியச் சிறுபான்மை தேசிய இனம் மீதான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. யூகோஸ்லோவேக்கிய அதிபர் மிலோசெவிக் ரசிய ஆதரவாளராக இருந்தார். 1999-ல் அமெரிக்க-நேட்டோ படைகள் தலைநகர் பெல்கிரேடு மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. கொசோவா இனப் படுகொலையை ரசியா ஆதரித்ததது. ரசிய எதிர்ப்பிலிருந்து கொசோவாவின் தனி நாடு கோரிக்கையை அமெரிக்க - நேட்டோ ஆதரித்தது. பிறகு புல்டோசர் (Bull dozer) புரட்சி எனும் வண்ண புரட்சி மூலம் மிலோசெவிக் ஆட்சியைக் கவிழ்த்து தனது பொம்மை ஆட்சியை நிறுவியது அமெரிக்கா. கொசோவா இனப் படுகொலையை ரசியா ஆதரித்ததால் பால்டிக் நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ரசியாவை தங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதின. கொசோவா ஆதரவு மூலம் ஜனநாயக நாடாகத் தன்னை காண்பித்துக் கொள்ளும் நாடகங்களை அமெரிக்கா நடத்தியது.

1999-ல் செசன்யா (கிழக்கு ஐரோப்பா) என்ற நாட்டின் உள் விவகாரத்தில் ரசியா இராணுவ ரீதியாகத் தலையிட்டது. அங்கு உருவான இசுலாமியத் தீவிரவாதக் குழுவை ஒடுக்குவது என்ற பெயரில் அங்குச் சென்ற ரசியா பிறகு செசன்யா ஆட்சியைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. செசன்யா மீது இராணுவ ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தி அதன் குரோஜ்னி (Grozny) என்ற தலைநகரை நாசப்படுத்தியது மட்டுமின்றி பல நகரங்களைக் கைப்பற்றியது. அங்கு தனது பொம்மை ஆட்சியை நிறுவியது ரசியா. இதனால் கிழக்கு ஐரோப்பிய, பால்டிக் நாடுகள் மத்தியில் ரசிய எதிர்ப்புணர்வு அதிகமாகியது.

1999 இல் அமெரிக்கா எந்த நிபந்தனையுமின்றி எந்தவொரு நாடும் நேட்டோவில் இணையும் வகையில் 'திறந்த கதவுக் கொள்கையை 'அறிவித்தது. ரசியாவின் இத்தகைய ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல் நடவடிக்கைகளுக்குப் பிறகு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து, ஹங்கேரி மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் 1999-ல் நேட்டோவில் இணைந்தன.

இரண்டாம் கட்ட நேட்டோ விரிவாக்கம்

ஜார்ஜியாவில் ரோஸ் புரட்சி மூலம் 2003-ம் ஆண்டு ரசிய சார்பு ஆட்சியைக் கவிழ்த்து தனது பொம்மை ஆட்சியை அமெரிக்க-நேட்டோ உருவாக்கியது. ஜார்ஜியா ஆட்சி தெற்கு ஒசிட்டியா மற்றும் அக்பாஜியா எனப்படும் சிறுபான்மை ரசிய தேசிய இனங்கள் மீது நிகழ்த்திய ஒடுக்குமுறைகளால் உருவான தேசிய இனப் பகைமைகளை ரசியா பயன்படுத்தத் துவங்கியது. அவ்விரு பிராந்தியங்களிலும் நடந்தக் கிளர்ச்சிகளை ஆதரித்தது. பிரிவினை கோரிய குழுக்களுக்கு அனைத்து உதவிகளையும் ரசியா செய்தது. கொசோவா பிரிவினையை அமெரிக்கா, ரசிய எதிர்ப்பு நிலையிலிருந்தும் தனது ஆதிக்கத்தை அப்பகுதியில் நிலை நாட்டவும் ஆதரித்தது போலவே, ரசியா அமெரிக்க எதிர்ப்பு நிலையிலிருந்தும் தனது ஆதிக்கத்தை அங்கு நிலை நாட்டவும் தெற்கு ஒசிட்டியா (South ossetia) மற்றும் அக்பாஜியா (Akbazia) பிரிவினைகளை ஆதரித்தது. இவற்றின் பின்னால் இரு ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல் - பொருளாதார - இராணுவ மேலாதிக்க நலன்கள் இருந்ததே தவிர தேசிய இன நலன்கள் ஏதுமில்லை. ரசியாவின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஜார்ஜியாவையும் நேட்டோவில் இணைக்கும் முயற்சியை அமெரிக்கா துவக்கியது.

ஜார்ஜியா மீதான ரசிய தலையீட்டிற்குப் பிறகு, பல்கேரியா (2004), எஸ்தோனியா (2004), ருமேனியா (2004), ஸ்லோவேக்கியா (2004), லட்டைவா (2004), லித்துவேனியா (2004), ஸ்லோவேனியா (2004) போன்ற பல நாடுகள் நேட்டோவில் இணைந்தன.

அமெரிக்க-நேட்டோவின் உலக மேலாதிக்க முயற்சிகளை வீழ்த்தி தங்களது உலக மேலாதிக்கத்தை நிறுவும் பொருட்டு ரசிய-சீன ஏகாதிபத்திய நாடுகள் ஷாங்காய் கூட்டமைப்பை (2001) உருவாக்கின. இக்கூட்டமைப்புடன் ரசியா 2002-ல் உருவாக்கிய 'கூட்டுப் பாதுகாப்பு கூட்டமைப்பு' (CSTOCollective Security Treaty Organisation) என்ற இராணுவக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுவதற்கான உடன்படிக்கை 2006-ம் ஆண்டு ஏற்பட்டது. 2007-ம் ஆண்டு ஷாங்காய் கூட்டமைப்பு 'ஒருங்கிணைந்த' ஆற்றல் சந்தை கொள்கையை' வெளியிட்டது. இனி அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை ஏற்க முடியாது என்று கூறி அதற்கு மாற்றாக தங்களது மேலாதிக்கத்திற்கான பல் துருவ ஒருங்கமைப்பை ரசிய-சீன நாடுகள் முன்வைத்தன. 2007 ஆம் ஆண்டு மியூனிச் மாநாட்டில் இனி அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தை ஏற்க இயலாது எனவும், ஜார்ஜியா, உக்ரைன் நாடுகளை நேட்டோவில் இணைக்கும் முயற்சியை அமெரிக்கா கைவிட வேண்டும் எனவும் அறிவித்தார் புதின்.

இதன் பிறகு, சீனாவுடன் பலமான அணிசேர்க்கை உருவான பிறகு, 2008-ம் ஆண்டு ஜார்ஜியா மீது நேரடி இராணுவ ஆக்கிரமிப்பு யுத்தத்தை ரசியா தொடுத்தது. தெற்கு ஒசிட்டியா மற்றும் அக்பாஜியா பிரதேசங்களை ஜார்ஜியாவிலிருந்து பிரித்து சுதந்திரக் குடியரசுகள் என்று அறிவித்து அவ்விரு பிராந்தியங்களிலும் இராணுவ தளங்களை ரசியா நிறுவியது. தெற்கு ஒசிட்டியா மற்றும் வடக்கு ஒசிட்டியா இடையிலான எரிவாயு குழாய் திட்டத்தைச் சேதப்படுத்தியதுடன் தெற்கு ஒசிட்டியாவில் செயல்படும் பாகு - சுப்சா (Baku - Supsa) எரிவாயு குழாய்களையும் கைப்பற்றியது.

இதன் பிறகு ஜார்ஜியாவும் நேட்டோவில் 2008 இல் இணைந்தது. அல்பேனியா மற்றும் குரோசியா ஆகிய நாடுகள் 2009-ல் நேட்டோவில் இணைக்கப்பட்டன. உக்ரைன் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது.

மூன்றாம் கட்ட நேட்டோ விரிவாக்கம்

2014 ஆம் ஆண்டு கிரீமியாவை உக்ரைனில் இருந்து ராணுவ நடவடிக்கையின் மூலம் பிரித்து தனிக் குடியரசாக ரசியா பிரித்தது தன்னுடன் இணைத்துக் கொண்டது. டோன்பாஸ் பகுதியிலும் ராணுவ இருப்பை பலப்படுத்தியது. அதன் பிறகு அதே ஆண்டில் வட மசிடோனியா, மாண்டின்குரோ ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைந்தன. கிரீமியாவை ரசியா ஆக்கிரமித்த பின்பு உக்ரைன் நேட்டோவில் இணைய தீவிரம் காட்ட துவங்கியது. ஆனால் ஜெர்மன், பிரான்சு ஆகிய நாடுகள் அமெரிக்காவுடனான முரண்பாடு காரணமாகவும், தமது ஐரோப்பிய மேலாதிக்க நலன்களில் இருந்தும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

உக்ரைன் மீதான ரசியாவின் நாசகர யுத்தத்திற்கு பிறகு, பின்லாந்து நேட்டோவில் இணைந்துள்ளது. மட்டுமின்றி கொசோவா மற்றும் போஸ்னியா ஆகிய நாடுகளும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

நேட்டோ-ரசிய உறவுகளும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் போர்களை ரசிய-சீன நாடுகள் ஆதரித்தலும்

அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்திய போது ரசியா கண்டிக்காததுடன் அதை ஆதரிக்கவும் செய்தது. 2001 ஆம் ஆண்டு துவங்கி 'இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப்போர் எனும் பேரில் அமெரிக்க - நேட்டோ நிகழ்த்திய போர்க் குற்றங்கள், ஆக்கிரமிப்பு போர்கள் வரலாறு காணாத காட்டுமிராண்டித்தனம் ஆகும். ஆனால் போர்க்குற்றவாளியான அமெரிக்க நேட்டோ நாடுகளை எதிர்த்து சீனாவும் ரசியாவும் செய்தது என்ன? அமெரிக்காவின் 'இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப்போரை' ரசியாவும் சீனாவும் ஆதரித்தன. ஆகவேதான் அமெரிக்காவின் ஆப்கான் ஆக்கிரமிப்பையும் ஆதரித்தன. தாலிபான் பயங்கரவாதிகள் தங்களது மத்திய ஆசிய மேலாதிக்கத்திற்கு எதிரிகள் என்பதிலிருந்தும், சீனாவில் உய்குர் இஸ்லாமியப் பயங்கரவாத எதிர்ப்பிலிருந்தும், சிரியாவில் மற்றும் ரசியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத எதிர்ப்பிலிருந்தும் அதை ஆதரித்தன. பிறகு தாலிபான் ஆட்சி ஆப்கானில் அகற்றப்பட்டதும், தாங்கள் பலமான ஏகாதிபத்திய நாடாக வளர்ந்ததும் அமெரிக்காவை எதிர்க்கத் துவங்கின.

அது மட்டுமின்றி 1994 இல் நேட்டோவின் போர்க் குற்றங்களுக்கு மனித முகமூடி தரும் அமைதிக்கான ஒத்துழைப்பு திட்டத்தில் (PFPPartnership for Peace) ரசியா 1994 இல் இணைந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் அரசியல் மற்றும் இராணுவ ஒத்துழைப்பு உருவாக்குதல், உலகில் அமைதி மற்றும் நிலைப்புத்தன்மையை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுக்காக இது உருவாக்கப்படுவதாக நேட்டோவும் ரசியாவும் வெட்கமின்றி கூறின. 1995ல் போஸ்னியாவில் அமைதியை நிலை நாட்ட நேட்டோவுடன் ரசியாவும் சென்றது. பிறகு

27.5.1997 அன்று, ஐரோப்பிய அட்லாண்டிக் பகுதியில் "ஜனநாயகத்தை" (இரத்தம் குடிக்கும் ஜனநாயகம்) நிலை நாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட நேட்டோ - ரசிய உடன்படிக்கை (NATO- Russia founding Act) ஒன்றில் ரசியா கையெழுத்திட்டது. இது பயங்கரவாத எதிர்ப்பு, அமைதி உருவாக்கம் (கல்லறை அமைதி) உள்ளிட்ட பல நோக்கங்களைக் கொண்டது என ரசியாவும் நேட்டோவும் கூறிக்கொண்டன. பிறகு 28.5.2002 அன்று உருவாக்கப்பட்ட நேட்டோ - ரசிய கவுன்சிலில் (NATORussian council) இணையும் ஒப்பந்தத்தில் புதின் கையெழுத்திட்டார். இது பயங்கரவாத எதிர்ப்பில் நேட்டோவுடன் ரசியா இணைந்து செயல்படும் என்பதற்கான ஒப்பந்தம் ஆகும். இதன் அடிப்படையிலேயே ஆப்கானுக்கு நேட்டோவின் சர்வதேச பாதுகாப்புப் படை ரசியா வழியாகச் செல்லவும், ஆப்கான் இராணுவத்திற்கு ரசியா பயிற்சி அளிக்கவும் புதின் அனுமதி தந்தார். 2008 ஆம் ஆண்டில் ஜார்ஜியா மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு நேட்டோ -ரசிய உறவில் விரிசல்கள் விழத் துவங்கின. 2014ல் கிரீமியாவை தன்னுடன் ரசியா இணைத்துக் கொண்ட பிறகு ரசியாவுடனான அனைத்து உறவுகளையும் நிறுத்திவைப்பதாக நேட்டோ அறிவித்தது.

தொகுப்பாக, நேட்டோவிற்கு கிழக்கு ஜெர்மனியை ரசியாதான் 1989ல் தாரை வார்த்தது. 1970-80களில் ரசிய சமூக ஏகாதிபத்தியம் அமெரிக்காவுடன் பனிப்போரில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவும் தனது முதலாளியப் பாதையைப் பாதுகாக்கவும், வார்சா நாடுகள் மீதான ரசியாவின் சமூக பாசிச ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து சோவியத் யூனியன் சிதறுண்டுப் போனதால், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளை அமெரிக்காவிற்கு ரசியா தாரை வார்த்தது. அதாவது அமெரிக்காவின் மூலதனத்தைச் சார்ந்து நிற்க வேண்டிய நிலைக்கு அந்த நாடுகளை அமெரிக்காவுடன் ரசியாதான் இணைத்து விட்டது. ஏன் ரசியாவும் கூட அதே நிலையில்தான் இருந்தது. 1990களின் இறுதியிலிருந்து அமெரிக்கா உலக மேலாதிக்கத்திற்கு முயன்று வந்தாலும் பலமாக இருந்த அமெரிக்காவிற்கும், பலவீனமாக இருந்த ரசிய ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் யுத்த வடிவம் எடுக்காவிடினும் முரண்பாடுகள் நீடித்தே வந்துள்ளன என்பதும், நேட்டோ விரிவாக்கத்திற்கு ரசியாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் முக்கிய தூண்டுகோலாக இருந்தது என்பதும் மேற்கூறிய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. உக்ரைன் நேட்டோவில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படவில்லையே தவிர அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகள் அனைத்துவித அரசியல் பொருளாதார இராணுவ உதவிகளை செய்தே வந்துள்ளன. அமெரிக்காவுடனான முரண்பாடு காரணமாக ஜெர்மனியும் பிரான்சும் உக்ரைனை நேட்டோவில் இணைக்க முட்டுக் கட்டை போட்டதையடுத்து, நேட்டோவில் உக்ரைன் இணைக்கப்படாது என அறிந்துதான் புதின் உக்ரைன் மீது யுத்தம் தொடுத்துள்ளார். ஆகவே நேட்டோ விரிவாக்க எதிர்ப்பு என்பது ரசியாவின் ஆக்கிரமிப்பு போருக்குத் தரப்படும் ஜனநாயக முகமூடியே.

 

(தொடர்ச்சி பகுதி -3 ல்)